Monday, May 12, 2008

தேர்தல் நடைமுறையில் மாற்றம் தேவை.....

இந்தியா!மிகப்பெரிய ஜனநாயகநாடு.தேர்தல்கள் பாரபட்சமற்றமுறையில் மிகப்பெரிய அளவில் நடத்தப்படுவதாக உலகநாடுகளில் பல்வேறு பாராட்டுக்கள் பெற்ற நாடு.பழங்காலத்தில் குடவோலை முறையில் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட நடைமுறையையும்,பின் கால ஓட்டத்திற்கேற்ப வாக்குச்சீட்டு மூலம் மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட முறையையும் பின்பற்றி தற்போதைய விஞ்ஞான வளர்ச்சிக்கேற்ப இ.வி.எம் என்றழைக்கப்படுகின்ற வோட்டிங் மிஷின் பயன்படுத்தப்படுகிறது.ஆனால் மக்கள் வாக்களிப்பதினை கட்டாயமாக்கவில்லை.ஆதலால் குறைந்த ஓட்டு பெற்றவர்களே மக்கள் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

உதாரணமாக ஒரு தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்ற வாக்காளர்கள் 1000 என வைத்துக்கொள்வோம்.60 சதவீத வாக்குப்பதிவு நிகழ்ந்தது எனில் வாக்களித்தவர்கள் 600 வாக்காளர்கள்.வாக்களிக்காதவர்கள் 400 வாக்காளர்கள்.இதில் 5 நபர்கள் தேர்தலில் நின்றார்கள் அவர்கள் பெற்ற வாக்குகள் முறையே அ,ஆ,இ,ஈ,உ ஆகியோர் முறையே 35,22,31,7,5 சதவீத வாக்குகள் பெற்றார்கள் எனவைத்துக்கொண்டால் அ,ஆ,இ,ஈ,உ ஆகியோர் பெற்ற வாக்குகள் எண்ணிக்கை முறையே 210,132,186,42,30 என்றிருக்கும்.தற்போதைய தேர்தல் நடைமுறையின் படி 210 வாக்குகள் பெற்ற ”அ” வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். இதில் வேடிக்கை என்ன வென்றால் பதிவான வாக்குகளினை மட்டும் எடுத்துக்கண்டால் ”அ” பெற்ற மொத்த வாக்கு 210 ஆனால் அவர்பெறாத வாக்குகள் 390 .இது ஒரு முரண்பாடு

இரண்டாவதாக வாக்களிக்க தகுதி பெற்றோர் 1000 ஆனால் ”அ”அவர்கள் பெற்ற வாக்குகள் 210 ஆக 790 வாக்காளர்களுக்கு ”அ” அவர்களை தேர்ந்தெடுக்க மனமில்லை ஆனால் என்செய்ய அவர் தான் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.இது விந்தையிலும் விந்தையன்றோ!

மாற்றங்கள் என்ன தேவை?

1.வாக்களிப்பதினை கட்டாயமாக்கவேண்டும்.
வாக்களித்தவர்களுக்கு சான்று வழங்கி அதனைக்காட்டினால் மட்டுமே அரசின் பிற சலுகைகளினை அனுபவிக்க முடியும் என்ற நிலையை உருவாக்க வேண்டும்.எப்படி பிறப்புச்சான்று கட்டாயமாக்கப்பட்டுள்ளதோ அதே போன்று வாக்களித்தச்சான்று கட்டாயமாக்கப்படவேண்டும்

2.முதல் முறை தேர்தல் முடிந்தவுடன் முதல் இரண்டு இடங்களினைப்பெற்றவர்களுக்கு மட்டுமோ அல்லது குறிப்பிட்ட சதவீதத்திற்கு மேல் பெற்றவர்களுக்கு மட்டுமோ மறுதேர்தல் நடத்தி 50 விழுக்கட்டிற்கு மேல் பெறுபவர்களே வெற்றி பெற்றதாக கருதப்படவேண்டும்.

3.வாக்களிக்க விரும்பவில்லை என்ற விருப்பத்தேர்வை அளித்து அது குறிப்பிட்ட சதவீதத்தினை தாண்டும் பட்சத்தில் வேட்பாளர்களினை மாற்றி மறுதேர்தல் நடத்தப்படவேண்டும்.

இது என்னுடைய கருத்து.அதை ஆமோதிப்பவர்கள் ஆமோத்திக்கலாம் மறுப்பவர்கள் பின்னூட்டமிடலாம்
கருத்துகள் வரவேற்கப்படுகின்றது.



இன்றைய ஸ்பெஷல்:
இரமணிச்சந்திரன் அவர்களின் கண்ணம்மா என்ற நாவல் மின்புத்தகமாக இங்கே உங்களுக்காக,தரவிறக்குங்கள்